10.12.07

"காசி ஆனந்தன் கவிதைகள் - பகுதி 1"

முரண்
இறைவனின் வாகனம் என்றான் நாயை
அவதாரம் என்றான் பன்றியை
இறைவனே என்றான் குரங்கை
இவனே திட்டினான் என்னை
- நாயே! பன்றியே! குரங்கே!

அடக்கம்
அடக்கம் செய்யப்படுகிறோம்...
இரண்டு பெட்டிகளில்.
சவப்பெட்டியிலும்
தொலைக்காட்சிப் பெட்டியிலும்

நாற்காலி
இங்கே வேறுபாடு அதிகம்
இல்லை
நாற்காலிக்கும் கட்டிலுக்கும்.
வீடு தூங்க கட்டில்
நாடு தூங்க நாற்காலி

உலகமைதி
மாந்த நேயம் பேசின
அணுகுண்டுகள்
புறாக்களை பறக்கவிட்டன
கழுகுகள்.
போராடிக்கொண்டிருக்கிறது
அமைதி.

அடி
கலையை கலைஞனை
போற்றிய நாடிது என்கிறாய்...
காலம் காலமாய்
பறையை பறயனை தாழ்த்திய
நீ.

பாடம்
புரட்சியாவது வெங்காயமாவது
என்கிறாய்
தெரிந்து பேசு
காயப்படுத்தியவனின் கண்ணீரை
வாங்கும் வெஙகாயம்.
சென்னிரை வாங்கும் புரட்சி

ஆணாதிக்கம்
எப்படியும் இருக்கலாம்
ஆணிண் திமிர்
திரௌபதைக்கு கணவன்
ஐந்தாகவும்
அர்ச்சுனனுக்கு மனைவி
ஐந்தாகவும்

கோயில்
செருப்புகளை வெளியே விட்டு
உள்ளே போகிறது அழுக்கு.

வேலி
மயில் இறகு புலித்தோல்
மான் கொம்பு யானைத்தந்தம்
அழகாய் இருக்கிறது எங்கள் வீடு.
வனவிலங்குகள் காப்பாளர் அப்பா

தளை
கணவனிடம் ஓப்புதல் கேட்கிறாள்
பெண்கள் விடுதலை
அமைப்பில் சேர.

No comments: