காலம்
உன் கையிலா கடிகாரம்?
கடிகாரத்தின் கையில் நீ.
வில்
வீழ்ந்த தமிழன் கதையை
விம்மி விம்மி
பாடிக்கொண்டிருக்கிறது
மேடையில்
-வெட்கம் கெட்ட வில்
கடற்கரை
உடல் நலம் தேடி
காற்றுவாங்க வந்து போகும்
பெரிய இடத்து மாடிகள்
இங்கேயே நோயோடும்
நொடியோடும்
ஒடுங்கி கிடக்கும் மீனவர்
குடிசைகள்
பெண்மை
தெரிவது உனக்கு அவள்
கண்களில்
வண்டும் மீனும் பூவும்
தெரிவதில்லை கண்ணீர்
நிலவு
புராணமாய் இறைவனின்
தலையில்
வரலாறாய் மனிதனின் காலில்.
வெறி
எரியவில்லை அடுப்பு சேரியில்.
போராடினோம்...
எரிந்தது அடுப்பல்ல-
சேரி
இருள்
பகலிலும் தலைவர்கள்
குத்துவிளக்கு ஏற்ற
நிகழ்ந்தன விழாக்கள்.
தேடுகிறோம்...
எங்கே வெளிச்சம்?
வீரம்
உன் கனவில் பாம்பு துரத்துகிறது
நீ ஓடுகிறாய்
குறவன் அவன் துரத்துகிறான்
பாம்பு ஓடுகிறது
வீரம் தொழிலாளிக்கு
தாஜ்மஹால்
காதலி புதைக்கப்பட்ட இடம்
காட்டுகிறாய்
காதலை புதைத்த இடம் காட்டு
எங்கே ஷாஜஹானால் கசக்கி எறியப்பட்ட
அந்தப்புரப் பெண்களின்
கறுப்புக் கல்லறைகள்?
சாமி
எங்கள் குடிசையில்
அடிக்கடி சாமி ஆடுவாள்
அம்மா ஏனோ தெரியவில்லை
அன்றும் இன்றும்
குடிசைக்கே வருகிறது சாமி
மாடிக்கே போகிறது வரம்.
10.12.07
"காசி ஆனந்தன் கவிதைகள் - பகுதி 2"
at 12:30 PM
Labels: நறுக்குகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment