குப்பைத்தொட்டி
அலுவலகத்தில் இருக்கிறவனுக்கு
இது குப்பைத்தொட்டி
குப்பை பொறுக்கி
வாழ்கிறவனுக்கு
இது அலுவலகம்.
மானம்
உன் கோவணம்
அவிழ்க்கப்பட்டதா?
அவன் கைகளை வெட்டு
கெஞ்சி கோவணம் கட்டாதே
அம்மணமாகவே போராடு.
ஏழ்மை
சதை பிடித்து விடுகிறாள்
அழகு நிலையத்தில்
எலும்புக்கைகளால்
அறுவடை
திரைப்படச்சுவரொட்டியை
தின்றகழுதை கொழுத்தது
பார்த்த கழுதை புழுத்தது
மாடு
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள்
வண்டி இழுக்கிறது
கொம்பை மறந்த மாட்டுமந்தை
மேடை
தமிழா!
ஆடாய் மாடாய் ஆனாயடா...
நீ என்றேன்
கைதட்டினான்
கண்ணோட்டம்
செருப்பைப்பார்கையில்
நீங்கள்
அணிந்திருக்கிறவனின்
காலைப்பார்க்கிறீர்கள்.
நான் செய்தவனின்
கையைப்பார்க்கிறேன்.
பெண்
ஏடுகளில் முன்பக்கத்தின்
அட்டையில்
வீடுகளில் பின்பக்கத்தில்
அடுப்பங்கரையில்....
நிமிர்வு
தேவை பயில்வான்களல்ல
வீரர்கள்
உன் உடலின் கூனல்பற்றிய
கவலைவிடு
வில்லில் இல்லாத நிமிர்வா?
கொடை
தங்க வளையலைக்கழற்றி
போராளியிடம் தந்தாள்
செலவுக்குவைத்துக்கொள்
உங்களில் பலருக்கு
கைகளே இல்லை
எனக்கு எதுக்கு வளையல்...
10.12.07
"காசி ஆனந்தன் கவிதைகள் - பகுதி 4"
at 1:05 PM
Labels: நறுக்குகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment